அக்டோபர் 29 : ஆன்மீகக் கல்வி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
வாழ்க்கை மலர்கள்….
அக்டோபர், 29…
ஆன்மீகக் கல்வி :
ஒரு ஆற்றில் திடீரென வெள்ளம் பெருகி வருகிறது. பல மைல்கள் தொலைவு வரையில் மழையே இல்லை. எப்படி தண்ணீர் வருகிறது? இதன் காரணமறிந்தால் எவ்வாறு ஒரு நாட்டில் திடீரெனப் போர் உண்டாகிறது என்பதை அறியலாம். எங்கோ பல மைல் தொலைவில் நல்ல மழை பெய்திருக்கிறது. இது ஒரு மேடான பூமி. மழைநீர் கடலை நோக்கி ஓடுகிறது. அந்த நீரைத்தான், வறண்ட ஆற்றில் பெரும் வெள்ளமாகக் காண்கிறோம். இதேபோல உலக மக்கள் வாழ்வில் கணக்கிட முடியாத துன்பங்கள் நிலவுகின்றன. எல்லாத் துன்பங்களுக்கும் காரணம், மனிதன் மதிப்பை, மனிதன் அறியாமல் செய்யும் தவறுகள் தான். எப்படி? அறநெறி வழியே வாழ மக்களுக்கு முறையான ‘ஆன்மீகக் கல்வி’ யும் இல்லை; பயிற்சியும் இல்லை. பெரும்பாலான மக்கள் இதனால் பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் நான்கிலே அளவு மீறிய ஆசையைப் பெருக்கிக் கொண்டு வாழ்கிறார்கள்.
உண்மையில் மனிதருக்கு பொருளும், புலன் இன்பமும் வாழ்வில் இன்றியமையாதவை. ஆயினும், அவற்றைப் பெறத் தனது நேர்மையான முயற்சியும், உழைப்பும் வேண்டும். உழைப்பின்றியே பொருளும், இன்பமும் பெற வேண்டுமென்ற வேட்பே, அதிகாரத்திலும், புகழிலும் அடங்கியுள்ளது. இதனால் தான், உலகம் முழுவதும் மனித குலம் பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் என்ற நான்கில் ஆசையைப் பெருக்கிக் கொண்டு என்றும், எதிலும் நிறைவு பெற முடியாமல், இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்ற முடிவில்லாத, அமைதியில்லாத மனநிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இறையுணர்வாகிய ‘பிரம்ம ஞானம்’ பெற்றால் தான், மேலே சொல்லப்பட்ட பேராசைகள் நான்கும் மறைந்து ‘மனநிறைவு’ உண்டாகும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
**************************************
“ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்றும்
ஒன்றிணைந்த உயர்நெறியே அறம் என்றாகும்.
ஒழுக்கத்தில் கடமை, ஈகை இரண்டும்
உள்ளடங்கி இருப்பதனை உற்றுப் பாரீர்;
ஒழுக்கமே வாழ்வில் என்றும் வெற்றி நல்கும்
உயர் மக்கள் செல்வமும் அளிக்கும் மேலும்
ஒழுக்கமே இறையுணர்வில் ஒளியுண்டாக்கி
உயர்த்தி அறிவில் முழுமை எய்த வைக்கும்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


Like it? Please Spread the word!