அக்டோபர் 28 : இனிமையான வாழ்வுக்கு இன்றியமையாத சாதனம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
வாழ்க்கை மலர்கள்….
அக்டோபர், 28….
இனிமையான வாழ்வுக்கு இன்றியமையாத சாதனம் :-
மனித வாழ்வுக்கு இறையுணர்வு மிகவும் அவசியமானது. இறையுணர்வு என்பது நம்பிக்கை. அது என்ன நம்பிக்கை (Faith) என்றால் “ஒரு பெரிய சக்தியானது பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது; அது என்னுள்ளும் இருக்கத்தான் வேண்டும்; நான் பிறப்பதற்கு முன்னேயும் இருந்தது, எனக்கு பின்னாலேயும் இருக்கும். அந்தச் சக்தி முன்னும் பின்னுமாக எல்லா இயக்கங்களையும் இயக்கிக் கொண்டிருக்கிறது என்றால், இப்பொழுதும் எப்பொழுதும் அது ஊடுருவி நிறைந்து இயங்கிக் கொண்டுதானே இருக்கும்” – இவ்வாறு நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி முழுமையாக இருக்கிறது என்ற ஒரு நம்பிக்கையின் மேல் செயல்களை ஒழுங்கு செய்து கொள்வது தான் “மதம்” (Religion) என்பதாகும். அதற்கும் மேலாக எவ்வாறு அந்தப் பரம்பொருள் நிறைந்த ஒன்று, மாறாத ஒன்று, எல்லாவற்றையும் சரியாக இயக்கிக் கொண்டிருக்கிறது, அது நமக்குள்ளாக எப்படி இயங்கிக் கொண்டு இருக்கிறது, நாமாக எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்று அறிந்து, அதிலேயே உறைந்து, அதுவே தானாக, தானே அதுவாக இருப்பது தான் “ஞானம்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
**************************************
கேட்போருக்குச் சொற்குறிப்பால் “கட+ உள்”
என்று சுருக்கிச் சொல்வேன்..
“சுகதுக்கம் அனுபவித்தேன், சோர்வு கண்டேன்
சுய அறிவால் ஆராய்ந்தேன், முடிவுகாண
சுகதுக்கம் உடலியங்கும் அறிவில் கண்டேன்
சூட்சுமமாய் மனங்குவித்து, ஒடுங்கிநின்று
சுகதுக்கம் கடந்துமோன நிலையுணர்ந்தேன்
சொரூபத்தில் அரூபநிலை யறிந்துவிட்டேன்
சுகதுக்கச் சுழல்தாண்ட முறை கேட்போருக்குச்
சொற்குறிப்பால் “கட + உள்” என்று சுருக்கிச் சொல்வேன்”.
தெய்வநிலை :
“எங்கும் நிறைவாக இருக்கிறார் கடவுளென்பீர்
இங்கு நம் உடல் உள்ளத் துறைந்தும் இருப்பாரன்றோ?
அங்கங்கே போய்த் தேடி அலைவானேன் அவர்க்காக
தங்க நம் உயிர்க்குயிராம் தவநிலையில் அவரே நாம்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


Like it? Please Spread the word!