அக்டோபர் 24 : தெய்வீகப் புதையல்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
வாழ்க்கை மலர்கள்….
அக்டோபர், 24….
தெய்வீகப் புதையல் :
“ஒரு குழந்தை தாயின் வயிற்றில் கருவாக உருவாகும் காலத்திலேயே அது தன்னுடைய பெற்றோர்களது பதிவுகளைப்பெற்றுக் கொள்கிறது. அதைப் போலவே ஒவ்வொரு தாவரத்தினுடைய விதையிலும் அந்தத் தாவரத்தின் எல்லாத் தன்மைகளும், குணங்களும் பதிவாகி அந்த விதையானது செடியாக வளரும் போது அந்தக் குணங்கள் ஒவ்வொன்றாகப் பிரதிபலிக்கின்றன.
ஆகையால் தான் நான் கருமையத்தை மனித இனத்துக்குக் கிடைத்த தெய்வீகப் புதையல் என்று சொல்கிறேன். அந்தக் கருமையம் தான் பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றலினுடைய நீதிமன்றம் என்றும் சொல்லலாம். அது மட்டுமல்லாமல் அதே கருமையம் தான் ஒருவரது தற்போதைய வாழ்க்கையில் ஏற்படும் உணர்வுகளுக்கெல்லாம் உற்பத்திக் கூடமாகவும், கருத்தொடராக வந்த பதிவுகளுக்கெல்லாம் களஞ்சியமாகவும் விளங்குகிறது. ஒவ்வொருவரும் கருமையத்தின் பெருமையை தெரிந்து கொள்வதோடு அதை மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தக் கருமையந்தான் “ஆன்மா” எனப்படுகின்றது. கருமையத்தின் தன்மைகள் தான் ஒரு சீவனின் முற்பிறவிகள் பலவற்றுக்கும் பின்பிறவிகள் பலவற்றுக்கும் கருத்தொடர் விளைவாகத் தொடர்புற்றிருக்கின்றது.
வாழ்க்கையை வாழ்வதற்கும் இன்பம், அமைதி, பேரின்பம் ஆகியவற்றை அனுபவிப்பதற்கும், அறிவின் முழுமை பெறுவதற்கும் கருமையத்தை எப்போதும் வளமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
சகஜ நிட்டை:
“கருதவத்தில் ஆரம்பச் சாதகர்கள்
கரும ஞானக்கருவிகளை இயக்கும் போதும்
புருவமத்தி நினைவோடு இருத்தல் வேண்டும்
புலன்கள் தமை இம்முறையில் பழக்கி விட்டால்
அருவநிலை பூரணத்தால் நான் ஒன்றென்றும்
அனேக உருவங்களாய் நான் பலவே என்றும்
ஒருமை தத்துவம் உணரும் ஆற்றலோடு
உடலில் சுழல்கின்ற இரத்தம் சுத்தமாகும்”.
உலகிணைந்த கல்விமுறை வேண்டும்;-
“கருத்தொடராய் வந்த வினைப்பதிவுகளின் வலுவைக்
கணிக்காமல் மதிக்காமல் ஏற்ற நல்லவினையால்
திருத்திடவோ சீரமைத்தோ உய்ய நினையாமல்
திரும்பவும் அப்பழைய வினைவழி நின்றேவாழ்ந்தால்
வருந்துவதும் வருத்துவதும் அன்றிவளம் ஏது?
வாழ்வுள்லோர் அனைவரும் இவ்வுண்மையை உணர்வோம்
பெருத்துவரும் பழிச்செயல்கள் மாறி உலகுய்ய
பேருலகம் இணைந்த ஆட்சி கல்வி இவை வேண்டும்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


Like it? Please Spread the word!