அக்டோபர் 02 : உணவும், மருந்தும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
வாழ்க்கை மலர்கள்….
அக்டோபர், 02….
உணவும், மருந்தும் :
“நீ சீரணிக்கும் அளவிற்குள்ளாக உணவு உட்கொண்டால் உணவை நீ சீரணிக்கிறாய். அதிகமாக உட்கொண்டால் உணவு உன்னைச் சீரணிக்கும்”.
எனவே சுத்தமானதும், எளிமையானதும், சத்து நிறைந்ததுமான உணவு வகை அன்றாடம் நமது உடலுக்குத் தேவை. காரம், புளிப்பு, உப்பு, சர்க்கரை இவற்றையும் மிதமாகக் கொள்ள வேண்டும்.
உணவில் அளவும் தரமும், முறையும் தவறினால், நோய்கள் உண்டாகும். அவ்வபோது தக்கபடி மருந்து எடுத்துக் கொண்டால் சரியாகி விடும் என்று இலேசாக நினைப்பதும் சரியல்ல.
மருந்து என்றால் என்ன? மனிதன் ஆற்றும் தவறான செயல்களால் நோய் உண்டாகிறது. அந்நோய்களைச் சமன் செய்ய, ஏற்ற ஆற்றல் உடலிலேயே இயற்கை அமைத்திருக்கிறது. ஒரு சமயம் உடலில் நோய் தீர்க்கும் ஆற்றல் வலுவற்றதாக இருந்தால், அந்த ஆற்றலை ஊக்கி விட ஏற்ற பொருட்களே மருந்து ஆகும். உயிர் ஆற்றலுக்கு உந்து சக்தி என்பது வழக்கு. அவ்வாறான உந்து ஆற்றலுக்குத் துணையாய் உந்தும் ஆற்றலைத்தான் மருந்து என்று கூறுகிறோம். மருவி உந்து ஆற்றல் மருந்து, மருவி வந்த மகளை மருமகள் என்பது போல, மருவி வந்த மகனை மருமகன் என்பது போல, மருவி உந்து ஆற்றலை மருந்து என்று வழங்குகிறோம். மருந்தின் உபயோகம் வேறு வழியின்றி ஒரு குறுகிய காலத்தில் சிறு அளவில் மட்டும்தான் பொருத்தமானது. ஏனெனில் சில மருந்துவகை, ஒரு நோயைக் குணப்படுத்தி, வேறொரு நோயை உண்டுபண்ணக் கூடியதே. இதையெல்லாம் தவிர்க்க இயற்கையான அறிவின் வழி முன் உண்ட உணவு முற்றிலும் செரிமானமான பின்னரே அடுத்த உணவு கொள்ளலாகும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * *
உணவும் எண்ணமும் :
“உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்
எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்;
எண்ணமோ உணவில் எழுச்சிபெறும் இயக்கமே
உண்பதோ எண்ணத்தால் உற்றுப்பார் உறவையறி”.
அளவோடு உணவு :
“உணவே உடலாக வந்துள்ளது ஆகையினால்
உணவை உண்டுதான் உயிர் வாழவேண்டும்
உணவில் அளவுமுறை மீறிட மீறிட
உணவாகவே உடல் மாறியும் போமன்றோ?”
அறிந்து அளவுடன் கொள்க :
“உறக்கம், உழைப்பு, உடை, உணவு
இவைகளில் எவற்றையும்,
மறுப்பதும், மிகுப்பதும் மனித உடலின் மகத்துவம்
அறியாதோர் செய்கையாம்”.
பெரியோர் இயல்பு :
“உணவில் எளிமை, உழைப்பில் கடுமை,
ஒழுக்கத்தில் உயர்வு, உத்தமர் இயல்பு”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


Like it? Please Spread the word!