அக்டோபர் 01 : வேண்டல் வளம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
வாழ்க்கை மலர்கள்….
அக்டோபர், 01….
வேண்டல் வளம் :
நாம் ஒவ்வொருவருடைய தேவையையும் விருப்பத்தையும் உணர்ந்து எந்த இடத்தில் குறை இருக்கிறது, எந்த இடத்தில் நிறை இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டு உதவி செய்வது, வாழ்வது தான் அன்பும் கருணையும். இதைத் தமிழில் வேண்டல் வளம் என்று சொல்வார்கள். வளம் என்றால் நம்மிடத்தில் இயற்கையாக உள்ள உறுப்பு என்பதாகும். வேண்டல் என்றால் அவ்வப்பொழுது ஏற்படக்கூடிய தேவை என்ன என்பதாகும். இதே போன்று பிறரின் வேண்டல் வளம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வளத்தைப் பயன்படுத்தவும், வேண்டலைப் பூர்த்தி செய்யவும் உதவ வேண்டும் என்பது தான் வேண்டல் வளம் தெரிந்து விளைவறிந்து வாழ்தல் என்பதாகும்.
இப்பொழுது அந்த வார்த்தை வழக்கில் வண்டவாளம் என்றாகிவிட்டது. நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் நம்மோடு இணைந்து உள்ளவர்களுக்கும் வேண்டல் வளம் தெரிந்து விட்டால், நான் எந்த அளவில் என்னுடைய வேண்டல் வளம் இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு அவர்களின் மூலமாக என்ன பெற முடியும், அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை அறிந்தால், உயிர்களிடத்து அன்பும் கருணையுமாக இருக்கக் கற்றுக் கொள்ளலாம். இந்த முறையில் ஒவ்வொருவரும் அன்பையும், கருணையையும் எழுச்சி பெறச் செய்து, அதன் வழியே வாழ முற்படும்பொழுது எல்லா உயிர்களிடம் ஓர் இனிமை ஏற்படும் அல்லவா? அந்த இனிமை தான் வாழ்வில் முழுமை தரும், அறிவை உயர்த்தி வைக்கும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
“அன்பு என்பது எந்த ஒன்றையும் உடலாலோ,மனத்தாலோ
தன்னோடு இணைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது”.
“தன்னோடு இணைந்துள்ள மற்றொன்றுக்குத்
தனது ஆற்றலைத் தொடர்ந்து அளித்து
அதனைக் காத்து வருவது கருணை”.
“இயற்கையை ஆராய்ந்து பார்த்தால்
அன்பும் கருணையும் தான் எங்கும் எதிலும்
அமைந்திருக்கக் காணலாம்”.
“நம்மை நோகடிபவர்களை நாம் நேசிக்கலாம்.
நம்மை நேசிப்பவர்களை ஒரு போதும்
நோகடிக்கக் கூடாது”.
“அன்பிரக்கம் தொண்டு தவம் ஈகை இன்சொல்
ஆன்மிக நெறியாகும் போற்றிக்காக்க
துன்பங்கள் குறைந்துவரும் மேலும் தெய்வத்
துணைகிட்டும் வாழ்வில் புகழ் நிறைவு ஓங்கும்;
நன்முறையில் தனிமனிதன் வாழக்கற்றால்
நாட்டினிலும் வீட்டினிலும் அமைதி ஓங்கும்,
இன்பமயமே எங்கும், இந்த உண்மை
எளிதன்றோ கற்பதற்கும் வாழ்வதற்கும்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


Like it? Please Spread the word!